மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்" - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்கும் தமிழக அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் சுமார் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் இருந்த நிலையில்,அதில் 1800 பேர் இறந்து விட்டனர்.7000 பேர் 53 வயதைக் கடந்து விட்டனர்.1500 பேர் 57 வயதைக் கடந்துள்ளனர்.இந்நிலையில்,மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை,ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அட்டவணையை விட குறைவாக உள்ளது.
மேலும்,கடந்த ஆட்சியில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் குறித்து மாநில அரசு எதுவும் கூறவில்லை.இதனால்,மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்கும் தமிழக அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்",என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,தமிழக அரசின் அரசாணையில் இந்த பணியில் சேருவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என தெரிகிறது.எனவே மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,இந்த இடையீட்டு மனுவை முடித்தும் உச்சநீதிமன்றம் வைத்துள்ளது.
Comments
Post a Comment