அரசுப் பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G... U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல்எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் L.K.G., U.K.G., வகுப்புகளைஎடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் (Sections) தொடங்கப்பட்டன.அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து, L.K.G., U.K.G., வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்குஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களதுகல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், L.K.G... U.K.G., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் L.K.G., U.K.G.,வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment