நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை மலைப்பகுதிகளுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு
நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மலைப் பகுதிகளுக்கு பணியிட மாறுதல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:
* மலை சுழற்சி மாறுதல்கள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
* அனைத்து ஆசிரியர்களும் மலைப் பகுதிகளில் சுழற்சி முறையின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மலைப் பகுதியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோரிடம் கடிதம் பெற்று அதே இடத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இது அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
* மலைப்பகுதிகளுக்கு ஆசிரியர்கள் மாற்றப்படும் போது ஏற்படும் காலிப் பணியிடங்கள், சமவெளிப் பகுதியில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை ஒட்டுமொத்த பணியிடங்களாக காட்ட வேண்டும்.
* பதவி உயர்வு பணியிடங்களான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான பதவி உயர்வானது மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மலைப் பகுதிகளில் காலிப்பணியிடம் இல்லாத பட்சத்தில் மட்டுமே சமவெளிப் பகுதிகளில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
* மலைப் பகுதி அமைந்துள்ள ஒன்றியங்களில் மலைப் பகுதியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் அவர்கள் மலைப் பகுதியில் விரும்பும் காலம் அல்லது துறை அனுமதிக்கும் காலம் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் 1 ஆண்டு.
* 100 சதவீதம் பார்வையற்ற ஆசிரியர்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட ஆசிரியர்கள், மன வளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் கொண்ட தமது குழந்தைகளை பராமரிக்கும் ஆசிரியர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்வோர், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், மூளை கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மலை சுழற்சி மாறுதலின் போது மலை ஏற்றம் செய்யும் நிகழ்வுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
இவை உள்பட 15 வகையான பிரிவுகளின் கீழ் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment