கல்விதான் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் - 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் அறிவுரை






அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.


தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதி படிப்பதை உறுதி செய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்டப் பாடல் ஆகியவற்றை வெளியிட்டார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்ட பாட நூல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர் கையேடு, சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வழங் கினார்.


விழாவில் முதல்வர் பேசியதாவது:


நீர் எப்படி தாகத்தை போக்குகிறதோ, அதேபோல, கல்வி தாகத்தை, அறிவு தாகத்தை தீர்க்கக் கூடிய வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.


இத்திட்டம், 2022-23 கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய 3 பாடங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என இரு மொழி வழியாக பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆடல், பாடல், கதையாக சொல்லுதல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருட்கள் என பல்வேறு வடிவங்களில் இத்திட்டத்தின் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.


'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் ஒரு பகுதியாக ரீடிங் மாரத்தான் (Reading, Marathon) என்ற தொடர் வாசிப்பு இயக்கம் கடந்த 1-ம் தேதி முதல், 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது. கூகுள் நிறுவன 'Read aloud' செயலி மூலம் நடந்த இவ்வியக்கத்தில் தமிழக அரசுப் பள்ளி குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் 200 கோடி சொற்களை வாசித்து இருக்கிறார்கள். 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இச்சாதனையில் 81.04 லட்சம் கதைகள், 7.04 லட்சம் மணி நேரத்தில் வாசிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே Read aloud செயலியில் இதுவரை இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தப் பட்டதே கிடையாது.


கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். கல்வி உரிமை என்பது நாம் போராடிப் பெற்றது. எனவே, கல்வியின் மீதான ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக காட்டினால், அதற்கு இணையாக படித்து சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல. வெறும் ஆசை வார்த்தைதான். தவறான பாதையை கைகாட்டும் சூழ்ச்சி அது. இவ்வாறு முதல்வர் பேசினார்.


விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசர், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் சுதர்சனம், கிருஷ்ணசாமி, சந்திரன், கணபதி, ஜோசப் சாமுவேல், கே.பி.சங்கர், துரை சந்திரசேகர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதைத் தொடர்ந்து, அழிஞ்சி வாக்கம் அருகே உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10-ம் வகுப்பு மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை முதல்வர் கவனித்தார். பள்ளியில் சமையலறை உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வைத் தொடர்ந்து, 'மாநிலம் முழுவதும் உள்ள கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகள் தொடர்பாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வில், குறைபாடுகளை கண்டறிந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு தெரிவித்து, குறைபாடுகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்' என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் நாளான நேற்று காலை 8.30 மணி முதலே பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வரத் தொடங்கினர். பெற்றோர் பள்ளிகளுக்கு வந்து, தங்கள் பிள்ளைகளை விட்டுச் சென்றனர்.


தமிழகம் முழுவதும் பல்வேறு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கல்வி உபகரணங்கள், சீருடைகள், பலூன்களை வழங்கியும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மயிலாடுதுறையில் உள்ள பள்ளியில், மயூரநாதர் கோயில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. பல இடங்களில் மேள தாளத்துடன் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டது. முதல் 5 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகளை நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முதல் நாளில் புத்துணர்வு வகுப்புகள் தொடங்கின. மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவையும் வழங்கப்பட்டன.


முதல்வர் வரவேற்பு: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும், ஆன்லைன் மூலம் கல்வி கற்றீர்கள். பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, இருபால் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துகள். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகளை நோக்கி பிள்ளைகள் வருகின்றனர். அவர்களை கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களை கற்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog