அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில மோகம்... சென்னையில் 84 சதவீதம் ஆங்கில வழிக்கல்வி..?
சென்னையில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், மாணவர்கள் ஆங்கில வழிக்கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தமிழ்வழிக்கல்வி கற்பதற்கு சென்னை போன்ற நகரங்களில் விரும்புவதில்லை. தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வியை அளிப்பதற்கே விரும்புகின்றனர்.
சென்னையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி பெற்றோர் தங்களின் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அளித்துள்ள தகவலில், ' சென்னையில் தமிழ்வழியில் 16 விழுக்காடு மாணவர்களும், ஆங்கில வழியில் 84 விழுக்காடு மாணவர்களும் படித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு பேர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிக்கொண்டு வந்த டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தமிழ்நாசர் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
'நான் எனது தங்கையை 5ஆம் வகுப்பு முடித்து 6ஆம் வகுப்பு தமிழ்வழிக்கல்வியில் அரசுப்பள்ளியில் சேர்க்க விரும்பி போராடி அனுமதி வாங்கினேன். இருப்பினும், சென்னை அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதை அறிந்தேன்.
இதனைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் உதவியது. என் தங்கையை சேர்ந்த எக்.டி.எம் காலனியின் அரசுப்பள்ளியில் 4500 மாணவிகளில் 4000 மாணவிகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இறுதியில் சமூக ஆர்வலர் நலங்கிள்ளியின் உதவியுடன் என் தங்கையை அந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடப் பிரிவில் சேர்ந்து கொண்டனர்' என்றார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்திவரும் நிலையில், இவ்வாறு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழ் தவிர்க்கப்படுவது மிகப்பெரும் அதிர்ச்சியானதாகும்.
தமிழ் நாசர் போன்ற சில சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் பாடத்தால் அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல திட்டங்கள் இருக்கையில் மக்களின் இந்த அறியாமை வருத்தமளிப்பதாக பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment