கணினிவழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்: தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்



ஆசிரியர் தகுதித் தேர்வை கணினி வழியில் இரு கட்டங்களாக நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில்சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.


டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கிடையே, கரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று குறைந்ததையடுத்து நடப்பாண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி அறிவித்தது. தொடர்ந்து, டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்நிலையில், இந்த ஆண்டு டெட் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:


டெட் தேர்வு இதுவரை எழுத்துத் தேர்வாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில், நடப்பாண்டு டெட் தேர்வை கணினி வழியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். தேர்வு மையங்களுக்காக, கணினி வசதியுள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இதுதவிர, டெட் தேர்வு முதல்முறையாக கணினி வழியில் நடத்தப்படுவதால், பட்டதாரிகளுக்கு இணையவழியில் மாதிரி தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.


மேலும், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, பிரத்யேக மென்பொருளை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் ஓய்வுபெற்று வருவதால், கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, பிரத்யேக மென்பொருளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog