அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு கல்வித்துறை உத்தரவு
ஜூன் 8:தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இணை இயக்குநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2021 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தை கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது . கூடுதல் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் அப்பள்ளிக்கு நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர் காலியிடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வட்டாரம், நிர்வாகம், பள்ளி செயல்படும் இடம், உயர்நிலை பள்ளியா, மேல்நிலை பள்ளியா, மாணவர்கள் மட்டும் பயிலும் பள்ளியா, பாடம், தமிழ்வழியா அல்லது ஆங்கில வழியா என்பது உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment