தபால் துறையில் 38,926 காலியிடங்கள்; தேர்வு இல்லாமல் வேலை: இன்னும் சில நாள் மட்டுமே அவகாசம்
India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details: போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணிக்கு விண்ணபிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்த வேலைக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பச் செயல்முறை குறித்து கீழே பார்ப்போம்.
தபால் சேவை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926
தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) - ரூ.12,000
உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) - ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022
விண்ணப்பிப்பது எப்படி?
கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும் - indiapostgdsonline.gov.in
உள்நுழைந்தவுடன், இணையதளத்தின் மேலே, பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் போன்ற சில இணைப்புகளைக் காணலாம். விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக விண்ணப்பிப்பவராக இருந்தால், பதிவு செய்தல் என்பதை கிளிக் செய்து உங்கள் அடிப்படை விவரங்களான, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, தந்தை பெயர், பாலினம், சமூகப் பிரிவு உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
அடுத்தாக, ஆதார் விவரங்கள், மாற்று திறனாளி விவரங்கள், மொழி, புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்துதல் பகுதிக்குச் செல்லும், அங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
பின்னர் உங்களுக்கு ஒரு பதிவெண் வழங்கப்படும். அதனை குறித்து வைத்துக் கொண்டு அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே, போஸ்ட் ஆபிஸ் ஜிடிஎஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, உங்களிடம் ஏற்கனவே பதிவெண் இருந்தால் நீங்கள் நேரடியாக, அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஒருமுறை பதிவு கட்டாயம். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதிவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவை முடித்த பிறகு, பதிவு எண்ணைக் குறித்து வைத்து, மேலும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பதாரர் அவர்களின் பதிவு எண் அல்லது கட்டண ஐடியை மறந்துவிட்டால் அல்லது அவர்களின் மொபைல் எண்ணை மாற்ற அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆக பதிவு செய்ய இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அதன் மூலம் விவரங்களை மீட்டெடுக்கலாம்.
பதிவு செய்த பின்னர், அப்ளை ஆன்லைன் பகுதியை கிளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர், எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது, முழுமையான விண்ணப்பப் படிவம் திரையில் கிடைக்கும். முகவரி, கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்றவற்றை சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். மதிப்பெண்கள் உள்ளிடும்போது மிக கவனமாக உள்ளிடுங்கள். ஏனெனில் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் தான் வேலை வழங்கப்படுகிறது என்பதால், கவனமாக உள்ளிடுங்கள்.
பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றி இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அடுத்ததாக மிக முக்கியமாக, நீங்கள் வேலைபார்க்க விரும்பும் கிராம அஞ்சல் அலுவலகங்களின் முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களுக்கு மட்டுமே நீங்கள் போட்டியிட முடியும். நீங்கள் உங்களுக்கான மாவட்டத்தை தேர்ந்தெடுத்த உடன், கிராம அஞ்சல் அலுவலகங்களின் விவரங்கள் கிடைக்கப்பெறும். அதில், பொதுப்பிரிவு மற்றும் உங்கள் சமூகப்பிரிவுக்கான காலியிடங்கள் மட்டும் காண்பிக்கப்படும். அதில் உங்கள் தேவையானதை தேர்ந்தெடுத்து சமர்பிக்கவும்.
இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை அடுத்தடுத்த தேவைகளுக்கு பயன்படுத்த அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Comments
Post a Comment