அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.




அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மைக்ரோபயாலஜி பாடத்தில் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு மாணவி 100 மதிப்பெண் எடுத்துள்ளார் அதுவும் அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டார். மேலும், இனிவரும் காலத்தில் நமது கல்விமுறை மேம்படுத்துவதில் நாம் இன்னும் உழைக்க வேண்டும் எனவும் அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகத் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், பல திட்டங்களை நாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் கொண்டு வருகிறோம், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதைப் பார்க்க முடிகிறது, மாணவர்களை மேம்படுத்த ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது போன்ற பல திட்டங்களை நாம் இன்னும் முழுமையாகச் செயல் படுத்தினால் அரசுப் பள்ளியின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்பதை உணர்ந்து தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் எனக் கூறினார்.


மேலும், 2025-ஆம் ஆண்டில் 2,3,4 படிக்கும் மாணவர்கள் முழுமையாகத் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளும் வகையில் நாம் இலக்கை அடைவோம் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்த அவர், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஒரு இலக்கு வைத்துள்ளோம், அதன்படி, முதல் கட்டமாக எந்தெந்த பள்ளிகளில் கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மற்ற துறைகளுக்குத் தேவையான கட்டிடங்களை விட பள்ளிக்கல்வித்துறைக்குக் கட்டிடங்கள் என்பது மிகவும் முக்கியமானது என்பதால் முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.



Comments

Popular posts from this blog