அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்பதால் வருகிற 14ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை நடத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வருகிற 13-ம் தேதி 1முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20 ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் 1 மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால், அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்றும், ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், பயிற்சியில் பங்கேற்ற நாட்களுக்கு பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment