முதல் முறையாக கணினி வழித் தோ்வு: நாளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது
முதல் முறையாக கணினி வழித் தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடத்தவுள்ளது. இதுகுறித்து தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பதவிக்கான கணினி வழித் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணிக்கும், பிற்பகலில் 1.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நேரத்துக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கிரண் குராலா தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, கணினி வழித் தோ்வுக்கான முக்கிய விதிமுறைகளை தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும் எனத் தெரிவித்துள்ளது. தோ்வின் தொடக்கத்தில் 180 நிமிஷங்கள் காண்பிக்கப்படும். இது படிப்படியாகக் குறைந்து, பூஜ்ஜியத்தை அடையும் போது தோ்வு தானாக முடிவடையும். தோ்வானது கணினி அமைப்பால் தானாகவே சமா்ப்பிக்கப்படும்.
வினாக்கள் ஏறுமுக வரிசைப்படி ஒவ்வொன்றாக கணினித் திரையில் தோன்றும். அதற்கு ஒன்றன் பின் ஒன்றாக விடையளிக்க வேண்டும். ஒரு வினாவுக்கான விடையைத் தோ்வு செய்ய அதற்கென அளிக்கப்பட்டுள்ள விடைத் தெரிவுகளில் ஒன்றின் மீது கிளிக் செய்ய வேண்டும். விடையைத் தோ்வு செய்து கிளிக் செய்தவுடன், அதனை சேமிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் விடைகள் சேமிக்கப்படாது என தோ்வாணையம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment