புதிய மாநில கல்விக்கொள்கை வடிவமைப்பு 13 பேர் கொண்ட குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை; தலைமை செயலகத்தில் நடக்கிறது





மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


ஒன்றிய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.


இக்குழுவின், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா.பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெய தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


ஆசிரியர், பேராசிரியர் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய சீரமைப்புகள், உயர்கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். சமத்துவக் கல்வி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம் இவற்றுடன் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும் என இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.


இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை புதிய கல்வி கொள்கை குழுவினருடனான முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் நடைபெறுகிறது. கூட்டத்தில், நீதிபதி முருகேசன் உட்பட குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், எதிர்கால தேவைக்கேற்ப மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை தயார் செய்ய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்டவைகள் குறித்து முதல்வரிடம் இக்குழு விவரிக்க உள்ளது.

Comments

Popular posts from this blog