10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் தோல்வி: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வித்துறை
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆந்திரப் பிரதேசக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 67.26% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மிகவும் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுவாகும்.
முன்னதாக கோவிட்-19 தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், 2019-20 மற்றும் 2020-21ஆம் கல்வியாண்டுகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, 796 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை அளித்துள்ள நிலையில், 71 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
பாடவாரியாகத் தேர்ச்சி அடையாத மாணவர்களின் விவரங்கள்
கணிதப் பாடம் - 1,21,488 மாணவர்கள்
சமூக அறிவியல் - 1,14,231 மாணவர்கள்
பொது அறிவியல் பாடம்- 1,09,647 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் மொழிப் பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளனர்.
முதல் மொழிப் பாடத்தில் 50,866 மாணவர்களும் இரண்டாவது மொழிப் பாடத்தில் 18,254 மாணவர்களும் 3-ஆவது மொழிப் பாடத்தில் 12,599 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
பெண்களே அதிகத் தேர்ச்சி
வழக்கம்போல, ஆண்களைவிடப் பெண்களே அதிகத் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 70.70% மணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 64.02% பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 3,17,789 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளின் செயல்திறன் வீதம் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக உண்டு, உறைவிடப் பள்ளிகள் 91.10 தேர்ச்சி விகிதத்தை அளித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 50.1 சதவீதமாக உள்ளது.
தெலுங்கு வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் மிகுந்த சரிவைச் சந்தித்து 43.97% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வி கற்போர் 77.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
துணைத் தேர்வுகள்
இதுகுறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர் போச்சா சத்தியநாராயணா, ''கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி மீது அதிக கவனம் செலுத்தும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 6 முதல் 15ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான கட்டணத்தை ஜூன் 7 முதல் செலுத்தலாம்'' என்று அமைச்சர் போச்சா சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment