TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு புதிய சிலபஸ்; டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC group 4 VAO exam How to download syllabus simple steps here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)
இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
அ. மொழிப்பாடம்
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
ஆ. பொது அறிவு
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
புதிய சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும். https://www.tnpsc.gov.in/
அடுத்ததாக மெனு பாரில் Recruitment என்பதை கிளிக் செய்து, அதில் சிலபஸ் (Syllabus) என்பதில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் புதிய பக்கத்திற்குச் செல்லும், அங்கு குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட சிலபஸ் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்து, புதிய சிலபஸை டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.
எளிமையாக டவுன்லோடு செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள். https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf
Comments
Post a Comment