TNPSC குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? வினாக்கள் எப்படி கேட்கப்பட்டன?
TNPSC group 2 exam how questions asked?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, வினாக்கள் எப்படி கேட்கப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வின் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. 5529 பணியிடங்களுக்கான தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.
தேர்வைப் பொறுத்தவரை தமிழ் மொழிப்பாடம் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், ஆனால் நூல், நூலாசிரியர் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் சார்ந்த வினாக்கள் மற்றும் இலக்கியத்தில் ஒரு சில பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தது.
அடுத்தப்படியாக, கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதில் 25 வினாக்களுக்கு 25 வினாக்களுமே விடையளிக்க கூடியதாக இருந்தது. பெரும்பாலும் தனிவட்டி, கூட்டு வட்டி சார்ந்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன.
பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இதில் புவியியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கேள்விகள் எளிமையாக இருந்தது. புவியியலில் இருந்து கிட்டதட்ட 16 வினாக்களும், அரசியலமைப்பு பகுதியிலிருந்து 7 வினாக்களும் இடம்பெற்றிருந்தன.
தேர்வர்கள் மிகவும் கவலையோடு எதிர்நோக்கிய பகுதிகள் யூனிட் 8 மற்றும் யூனிட் 9. இந்த இரண்டு பாடங்களும் தற்போதைய குரூப் 2 தேர்வில் தான் முதன்முதலில் கேட்கப்பட்டுள்ளது. எனவே எப்படி வினாக்கள் வரும் என தேர்வர்கள், தயங்கியிருந்த நிலையில், வினாக்கள் சற்று எளிமையானதாகவே கேட்கப்பட்டுள்ளன. தமிழ் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த வினாக்கள், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதியை படிப்பது தமிழ் மொழி பகுதியில் சில வினாக்களுக்கு விடையளிக்க உதவக்கூடியவை. எனவே தமிழ் மொழிப் பாடம் எடுத்தவர்களுக்கு யூனிட் 8 சற்று எளிமையாக இருந்திருக்கலாம்.
யூனிட் 9 ஆன தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தததாக கூறப்படுகிறது. இதில் கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டன. ஏனெனில் இவற்றில் கேட்கப்பட்ட வினாக்களை நடப்பு நிகழ்வுகள் பகுதியோடு பொருத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்விற்கு 11.78 பேர் ஹால் டிக்கேட் பதவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வினை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment