பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!
பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்வியின் தேவையை உணர்ந்து, கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அதனை செயல்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. அதை சரி செய்யக்கூடிய முயற்சியில் முதலமைச்சர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின் பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்". இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Comments
Post a Comment