ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்!





வே.வசந்தி தேவி எழுதிய 'இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம்' என்ற கட்டுரையின் (30.05.22) பேசுபொருள் முக்கியமானது. ஆனால், அணுகுமுறையில் முரண் தென்படுகின்றது



1. இந்தக் கட்டுரையில் ஆசிரியர்கள்தான் குற்றவாளிகள் என்ற தொனி மேலெழுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களிடம் இந்த கரோனா காலகட்டத்தில் பேசினார்கள்; தொடர்பில் இருந்தார்கள்; எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்கவும் செய்தார்கள். விகிதாச்சாரத்தில் மாறுபாடு இருக்கலாம். எல்லா மாணவர்களிடமும் ஆசிரியரின் கைபேசி எண் இருந்தது (வாட்ஸ்அப் குழுவில்தானே செய்தி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது). ஆனால், இது ஒரு சமூகக் கடமை. ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து மாணவர்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டும், துயரிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் தொடர்பில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம்.


2. கரோனா காலகட்டத்துக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம் இருந்ததா? அவகாசம் கொடுக்கப்பட்டதா? அவர்கள் பெரும்பாலான நேரம், அரசுக்குத் தகவல்கள், தரவுகள் திரட்டுபவர்களாகத்தானே இருந்தார்கள். கற்றல்-கற்பித்தலுக்குக் குறைந்த நேரமே கிடைத்தது. கட்டுப்பாடுகள், சுழற்சி முறையில் வகுப்பறைகள் என வழக்கத்தைவிடக் கூடுதல் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.


3. என்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி தர வேண்டும் என்று சொல்கிறது கட்டுரை. பயிற்சி மட்டுமல்ல, உண்மையில் எல்லா ஆசிரியர்களுக்குமே மனநல ஆலோசனைகள் தேவை. அவர்களுமே அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குமே கரோனா காலகட்டம் சிக்கல்களைக் கொடுத்துள்ளது. குழந்தைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் தேவை.


பயிற்சி பெற்ற முழு நேர மனநல ஆலோசகர்களே இதற்குத் தீர்வாக அமைய முடியும். கரோனா காலகட்டம் கொடுத்த அழுத்தத்துக்கு மட்டுமல்ல, இனி வழக்கமான நாட்களுக்கும் தேவை. இதற்கான முன்னெடுப்புகள் இனியாவது தொடங்கப்பட வேண்டும். இது கல்வி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அவசியம். பள்ளிக்கு இரண்டு நாட்கள் என மூன்று பள்ளிகளுக்கு ஒரு ஆலோசகர் என்று நியமிக்கலாம். அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் தீர்மானிக்கலாம். மீண்டும் ஆசிரியர்களையே இதில் பணித்து, இன்னும் சுமையைக் கூட்டி, திரும்பவும் அவர்களை இதைக்கூடச் செய்ய மாட்டீர்களா எனக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடக் கூடாது.


துரோகம் இழைக்கப்பட்டதா எனில், இது ஒரு விபத்து. இதை யாரும் ஊகிக்கவில்லை. இச்சூழலில், ஆசிரியர்கள் என்ற ஒரு அங்கத்தினரை மட்டுமே குற்றவாளிகளாக்கி, அவர்கள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதை விடுத்து, ஒரு சமூகமாக எப்படி இதனைக் களைவது என்றே அணுக வேண்டும்.

-விழியன், சிறார் எழுத்தாளர். தொடர்புக்கு: umanaths@gmail.com


கட்டுரையின் லிங்க்: இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்


Source : www.hindutamil.in

Comments

Popular posts from this blog