இது எங்க கிளாஸ் சார்!' - லீவ் நாள்களில் சம்பாதித்த பணத்தில் பெயின்ட் அடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
ஆசிரியரை மிரட்டுவது, அடிக்கடி கை ஓங்குவது, வகுப்பறை மேசைகளை உடைத்து துவம்சம் செய்வது என கடந்த சில நாள்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது, 'அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்' எனக் கடும் விமர்சனங்களை எழுப்பியிருப்பதோடு, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோரிடையே ஒரு தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நிலையில், திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் செய்திருக்கும் செயல் தமிழகம் முழுக்கப் பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சுதாகர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களை அழைத்து, 'விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நம்முடைய பள்ளிக்கு தேர்வெழுத வருவார்கள். எனவே, வகுப்பறையை சுத்தம் செய்வதோடு சுவரிலுள்ள கிறுக்கல்களை எல்லாம் முயன்றவரை அழிக்கப் பாருங்கள்' என்றிருக்கிறார். அதையடுத்து வகுப்பறைகள் அனைத்தையும் சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் இறங்கியிருக்கின்றனர்.
ஆனால், 12-ம் வகுப்பு 'இ' பிரிவு மாணவர்களோ இன்னும் ஒரு படி மேலே போய், தாங்கள் படித்த வகுப்பறையை சுத்தம் செய்ததோடு, கையில் இருந்த பணத்தைப் போட்டு வகுப்பறையின் சுவருக்கு வண்ணம் பூசி அசத்தியிருக்கின்றனர். இதனை வீடியோவாக எடுத்த ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர, அது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தவறான கண்ணோட்டம் பரவி வந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியிருப்பது பெரும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. இதுகுறித்து லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சுதாகரிடம் பேசினோம்.
பொதுத் தேர்வு நடக்கவிருக்கிறது, வகுப்பறையை சுத்தப்படுத்தி வைத்திருங்கள் என்று ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் சொல்லியிருந்தோம். அந்த வகையில் 12-ம் வகுப்பு 'இ' பிரிவைச் சேர்ந்த ஆர்ட்ஸ் - கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்கள் 38 பேரும், தங்கள் கைகளில் இருந்த பணத்தைப் போட்டு சுமார் 3 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக்கு வண்ணம் அடித்துள்ளனர். வெளியாள்களை வைத்து அடித்தால் அதற்கு செலவாகும் என மாணவர்களே வகுப்பறை முழுக்க வண்ணம் தீட்டியுள்ளனர். இதில் சில மாணவர்கள் லீவ் நாள்களில் வேலைக்குச் சென்று சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்திருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட வகுப்பறைக்கு பலமுறை சென்று மாணவர்கள் செய்த தவறுகளைக் கண்டித்திருக்கிறேன். ஆனால், தற்போது மாணவர்கள் செய்துள்ள இந்தச் செயல் பள்ளிக்கே பெரும் பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறது. இதனைப் பார்த்து இன்னும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும், 'எங்க கிளாஸ் ரூமையும் நாங்க பெயின்ட் பண்ணலாம்னு இருக்கோம் சார்' எனச் சொல்லி, தங்களுடைய வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்துள்ளனர். மாணவர்களிடம் இப்படியான பாராட்டத்தக்க செயல்பாடுகளைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்று மகிழ்ந்தார்.
'இது நம்முடைய பள்ளி' என எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுமே அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் இருந்தால்... நாளை நமதே!
Comments
Post a Comment