ஒழுக்கம் தவறினால் குற்ற நடவடிக்கை: 'குரூப் - 2' தேர்வர்களுக்கு எச்சரிக்கை
தேர்வறையில் ஒழுக்கம் தவறி நடந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2 ஏ' ஆகிய பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே, வரும், 21ம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க, 11.78 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.விண்ணப்ப பரிசீலினை முடிந்து, விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்கள் வழங்கப் பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டில், தேர்வு மையங்களின் முகவரிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.இந்த தேர்வு, 38 மாவட்டங்களில், 4,012 மையங்களில் நடக்கிறது.
தேர்வர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, பல்வேறு வழிகாட்டல்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தேர்வறையில் விதிகளை மீறி நடந்தால், அவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட வழிகாட்டல்:
* ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.
சுயவிருப்பத்தின்படி தேர்வு மையம் மாற்றப்படாது. தேர்வர்களுக்கான நிபந்தனைகளை சரியாக படித்து கொள்ள வேண்டும்.
● தேர்வறையில், மற்ற தேர்வர்களிடம் கேட்டு விடை எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை பார்த்து விடைகளை காப்பி அடித்தல், மற்றவர்கள் எழுத விடைகளை காட்டுதல், 'பிட்' அடித்தல், அறை கண்காணிப்பாளர், ஊழியர்கள் உள்ளிட்டோரின் உதவியை பெற்று விடையை தேர்வு செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
● மொபைல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து வருவது கூடாது.
● விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல், தேர்வறைக்கு வெளியே எடுத்து செல்வதும், பார்கோடு பகுதியை கிழிப்பதும் முறைகேடு புகார்களாக கருதப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் அறை கண்காணிப்பாளர்களிடம் ஒழுக்கம் தவறி நடந்து கொள்ளக்கூடாது
● இதுபோன்று முறைகேடாக நடந்து கொள்வது, காப்பியடிப்பது போன்றவற்றில் ஈடுபடுவோர், மீண்டும் டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வை எழுத தடை விதிப்பதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment