கட்டாய கல்வி உரிமை சட்டம் - தனியார் பள்ளிகளில் சேர 1,42,175 பேர் விண்ணப்பம்!
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில், 8,238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 94,256 இடங்கள் நிரப்பப்பட இருந்தன. இதற்காக இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி கூறுகையில், "தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர், தகுதியில்லாத விண்ணப்பதார் விவரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவை பள்ளித் தகவல் பலகையிலும், rte.tnschools.gov.in என்ற இணையதளத்திலும் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், பள்ளியில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தால், அந்த மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படும். காலியாக உள்ள இடங்களை விட அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தால், அந்த இடங்களுக்கு மே 30 ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் மே 31 ஆம் தேதி வெளியிடப்படும். ஜூன் 4 ஆம் தேதிக்குள் மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த விவரத்தை அளிக்க வேண்டும்" என கூறினார்.
Comments
Post a Comment