காலை உணவு, சனிக்கிழமை விடுமுறை; கல்விக்கொள்கை: அமைச்சர் அறிவிப்புகளில் 10 முக்கிய அம்சங்கள்!



பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுத் தேதிகள் அறிவிப்பு, பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு, மாநிலக் கல்விக்கொள்கை, சனிக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.


அதன் முக்கிய அம்சங்கள்:


1. 1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.


2. மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.


3. கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும். 210 வேலை நாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளன.


4. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்.


சனிக்கிழமைகளில் விடுமுறை


5. 2022 - 23ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி, சனிக்கிழமை பள்ளிகள் கிடையாது. தேவைப்பட்டால், அதாவது பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய தேவை இருந்தால் சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும்.


6. கட்டணம் வசூலிப்பதில், தனியார் பள்ளிகள் கறார் காட்டக்கூடாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்.


7. ஜூன் 13-ம் தேதி காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. அதற்குப் பிறகு, முழுவீச்சில் காலை உணவு வழங்கப்படும். சிற்றுண்டி வழங்கப்படும் நேரத்தில் மாற்றம் இருக்காது. காலை 8.30 மணிக்கு உணவு வழங்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.


8. மாநில கல்விக் கொள்கை குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். எப்போது என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும்.


மாணவர்களுக்கான இணையவழி சேவைகள்‌


9. தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று (Person Studied in Tamil Medium- PSTM)‌, கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை இணையம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும்‌ பெறும்‌ நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


10. ஆசிரியர்கள்‌ தற்செயல்‌ விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளுக்குக் கைப்பேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog