புதிய கல்வி கொள்கைக்கு வல்லுநர் குழு அமைப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின்!




தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச் சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழைப் போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் கழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது.


மேலும் அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தைக் கழக அரசு சூட்டியுள்ளது.


அதனைத்தொடர்ந்து சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும், தமிழகத்தின் இளையசக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.


மேலும் அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog