மாணவர் சேர்கைக்கு லஞ்சம்... கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.
அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், 15 நாட்களுக்கு பின் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை வழங்கவும் முதல்வர் கோரி உள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள், பள்ளி முதல்வர் ஆனந்தனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 30 ஆயிரம் ரூபாயை புகார்தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
Post a Comment