கருணாநிதி வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ஸ்டாலின் : கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்ப்பு
யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2010ல் முதல்வராக இருந்த கருணாநிதி அளித்த எழுத்துப்பூர்வ வாக்குறுதியை, தற்போது முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்' என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.'அரசு கலை கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் பி.எச்டி., நெட்/செட் என யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்படுவர்' என 2010 மார்ச் 22ல் கருணாநிதி உத்தரவில் அப்போதைய உயர்கல்வி செயலாளர் கணேசன் எழுத்துப்பூர்வ உறுதியளித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 'பணி அனுபவம் அடிப்படையில் தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்' என அறிவிக்கப்பட்டு 1146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியராக தேர்வு செய்ய உத்தரவும் பிறப்பித்தது. 2021 பிப்.,15 மற்றும் 18ல் அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேர்முகத் தேர்வு நடக்கவில்லை.இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து 'சிறப்பு டி.ஆர்.பி., நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஓராண்டாக காத்திருப்போருக்கு நேர்காணல் நடத்தி நியமனம் செய்ய' முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஏப்.,11ல் நடக்கும் உயர்கல்வி மானிய கோரிக்கையின் போது 2010ல் கருணாநிதி அளித்த வாக்குறுதியை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்தும் வகையில் நுாதனப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Comments
Post a Comment