உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை.!


பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.


ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும்.


தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது.


உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்துக்கிடக்கிறார்கள்.


இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.


விளையாட்டு ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் தேவைப்படுவதால், படிப்பதற்கான நேரம் மிகவும் குறைவு எனக்கூறுகின்றனர்.


மேலும் விளையாட்டில் திறமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அதிக கவனம் செலுத்துவதால், படிப்பில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது.


தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய முறையை உடற்கல்வி ஆசிரியர்கள் விரும்பவில்லை.


காரணம் விளையாட்டு ஆசிரியர்களுக்கு தேர்வு முறை இருந்தால் புதிய விளையாட்டு வீரர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புகள் இருந்தாலும், ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல வருடங்களாக அரசுப்பணிக்காக காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது.


குறிப்பாக மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க விளையாட்டு வீரர் தான் சரியாக பயிற்றுனராக இருப்பாரே தவிர புத்தகத்தை மட்டும் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் பொருத்தமான விளையாட்டு ஆசிரியராக இருக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.


இதனால் மாணவர்களின் உடற்கல்வியில் தடையும், தடங்கலும் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறை மூலம் பணி நியமனம் வழங்குவது பொருத்தமற்றதாக அமையும் என்பதால் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தால் தான் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் தரும் என்கிறார்கள்.


எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog