அண்ணா பல்கலை: 3 மாதங்களில் தயாராகிறது புதிய பொறியியல் பாடத்திட்டம்
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புதிய பொறியியல் பாடத்திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிறது.
நிகழ் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகவிட்டதாக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவா்களுக்கு வேலை கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் இருந்துவருகிறது. இந்த நிலையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம்செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி அறிவித்திருந்தாா்.
இந்தநிலையில் பொறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு பாடத்திட்டங்களும் மாற்றப்படவுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரக்கூடிய முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டத்திற்கு கல்விக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் நவம்பா் 1-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்களைத் தொடா்ந்து அடுத்தடுத்து 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு, 4-ஆம் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பேராசிரியா்கள் மாணவா்களுக்கு அதிகளவில் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதிய பாடத்திட்டம் தொழில் துறையினா் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல் அண்ட் டி போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் எனத் தெரிகிறது.
மாணவா்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப மாணவா்களைத் தயாா்படுத்தும்பொருட்டும் புதிய பாடத்திட்டம் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் நிகழ் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment