பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் சங்க திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழ.கெளதமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 16,459 பகுதிநேர சிறப்பாசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.
இந்த ஆசிரியா்கள், உடற்கல்வி, இசை, ஓவியம், கணினி, தையல் பயிற்சி போன்ற பாடங்களை எடுத்து வருகின்றனா்.
ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வீதம், வாரம் 3 நாள்கள் என மாதத்தில் 12 அரை நாள்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.7,700 ஆகவும், தற்போது ரூ.10 ஆயிரமாகவும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தோதல் அறிக்கையிலும், பள்ளி கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பிலும் பகுதிநேர சிறப்பாசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனத் தெரிவித்திருந்தனா்.
ஆனால், இதற்கான அறிவிப்பு தற்போது வரையில் வெளியாகவில்லை.
சிக்கிம் மாநில அரசு மகரசிக்ஷா திட்டத்தின்கீழ் 8 ஆண்டுகளுக்குமேல் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆகவே, சிக்கிம் மாநிலத்தைப்போல தமிழகத்திலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment