TNTET Notification 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 14 முதல் எப்படி விண்ணப்பிக்கலாம் : முழு விவரம்..



நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதற்குத் தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி

* 12ஆம் வகுப்புடன் கூடிய ஆசிரியர் பட்டயப் படிப்பு.

* பட்டப் படிப்புடன் கூடிய ஆசிரியர் பட்டயப் படிப்பு.



வயது வரம்பு

தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.


தேர்வு முறை

மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக் காலம் 3 மணி நேரம்.


மொழிப் பாடத்துக்கு தமிழ்/ தெலுங்கு / மலையாளம் / கன்னடம் / உருது என ஏதேனும் ஒரு மொழியில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் இருந்து (Child Development and Pedagogy) 30 கேள்விகளும் ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழல் அறிவியலில் இருந்து தலா 30 கேள்விகளும் கேட்கப்படும்.


இரண்டாம் தாளில், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் இருந்து 30 கேள்விகளும் மொழிப் பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகளும் கேட்கப்படும். மீதமுள்ள 60 கேள்விகள், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து கேட்கப்படும்.


தேர்வுக் கட்டணம்


தேர்வர்களுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.


தேர்வு மையங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படும். அதுகுறித்த விவரங்கள் ஹால்டிக்கெட்டில் பின்னர் தெரிவிக்கப்படும்.


தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்.


கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்

Comments

Popular posts from this blog