பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து... மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை
இலங்கையில் பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் போதுமான டாலர்கள் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேப்பரை பொருத்தளவில் அவை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் பேப்பரை இறக்குமதி செய்வதற்கு போதுமான டாலர்கள் இல்லாததால் பேப்பருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இலங்கை கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வு நடத்துவதற்கு போதுமான பேப்பர் மற்றும் அச்சு மை இல்லாத காரணத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்'
நடைபெறவுள்ள தேர்வு முழு ஆண்டுத் தேர்வு என்பதால் இலங்கையில் பரபரப்பு காணப்படுகிறது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் மளிகைப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பல்வேறு பகுதிகளில் அரசு மின்தடையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால்பவுடர் தேவையான பொருட்களை அரசு வழங்கி வருகிறது.
இலங்கைக்கு 6.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் சுமை உள்ளது. கடனைக் குறைப்பதற்கு சீனாவிடம் இலங்கை நிதி கேட்டிருந்த நிலையில் அந்நாட்டிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
Comments
Post a Comment