'எமிஸ்' பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த சிரமும் இல்லை மேலும் ஆசிரியர் நியமனம், டெட் தேர்வு போன்ற கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு எனப்படும் 'எமிஸ்' திட்டப்பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த பணிப்பளுவும் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 17) நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள். எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அதிகாரிகளுடன் இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதன் மூலம் இத்துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிய முடிகிறது. இங்கு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் குறித்தும் அதிகளவில் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்' என்றார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
கேள்வி: பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா?
அமைச்சர்: அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து தேர்தல் அறிக்கையிலும் கூறியிருக்கிறோம். இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?
அமைச்சர்: உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திய பிறகு, காலி இடங்கள் இருந்தால் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: டிஆர்பி மூலமாக புதிதாக டெட் தேர்வு நடத்தப்படுகிறதே?
அமைச்சர்: ஆர்டிஇ சட்டத்தின்படி ஆண்டுக்கு இரண்டுமுறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்தமுறையும் டிஆர்பி மூலமாக டெட் தேர்வு நடத்தப்படும்.
கேள்வி: ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் வருகின்றன. அதைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?
அமைச்சர்: பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் பிரச்னைகள் சம்பந்தமான புகார்களை மாணவ, மாணவிகள் 14417, 1098 ஆகிய ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறோம். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதுதான் பாலியல் புகார்கள் அதிகளவில் வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் எத்தனை பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்கள் ஏதேனும் உண்டா?
அமைச்சர்: பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், எத்தனை பேர் இதுவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர் என்ற தரவுகளை இப்போதுள்ள சூழலில் தரலாமா என்று தெரியவில்லை. அதேநேரம், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார்கள் தரப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளன. பள்ளியில் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது திட்டமிட்டே சிலர் பாலியல் புகார்களை கூறுகின்றனர். பொய் புகார்கள் குறித்தும் தனியாக விசாரித்து வருகிறோம்.
கேள்வி: கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவே?
அமைச்சர்: தமிழகம் முழுவதும் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 3.50 லட்சம் ஆசிரியர்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் தெற்கு தமிழகத்தில் இருந்துதான் வந்துள்ளனர். அவர்கள் அங்கு பணியாற்றவே விரும்புகின்றனர். அவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வட்டாரங்களில் பணியாற்ற ஆசைப்படுவதில்லை. தயவு செய்து ஆசிரியர்கள் இத்தகைய பின்தங்கிய வட்டாரங்களில் பணியாற்ற தாமாக விருப்பப்பட்டு முன்வர வேண்டும்.
கேள்வி: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பதில் சாதிய பாகுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே?
அமைச்சர்: நிச்சயமாக சாதிய பாகுபாடு கிடையாது. அதேநேரம் இத்திட்டத்தில் பணியாற்ற வரும் தன்னார்வலர்கள் எந்த ஒரு தனிப்பட்ட தலைவரையோ இயக்கத்தையோ சார்ந்தவராக இருந்து விடக்கூடாது. தனது கருத்தை புகுத்தி விடக்கூடிய நபராக இருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தன்னார்வலர்களின் பேஸ்புக் பக்கம் கூட ஆய்வு செய்யப்படுகிறது. முறையாக தேர்வு வைத்துதான் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இல்லம் தேடி கல்வித்திட்டம் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 6.60 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நமக்குத் தேவை 1.76 லட்சம் பேர் மட்டுமே. இப்போது அதையும் தாண்டி 1.78 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டு, 35 லட்சம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி குழந்தைகளும் இத்திட்டத்தில் அதிகளவில் பயன்பெறுகிறார்கள்.
கேள்வி: எமிஸ் பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்துவிட்டது. அவர்கள் ஒரு அமைச்சுப் பணியாளரின் வேலையைத்தான் செய்கின்றனர். எமிஸ் பணிகளால் ஈராசிரியர் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட அவர்கள் குழந்தைகளை விட்டு வெறியேறிவிட்டனரே?
அமைச்சர்: எஜூகேஷனல் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் என்ற எமிஸ் பணிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்று ஏற்கனவே அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் எமிஸ் பற்றிதான் அதிகமாக பேச ஆசைப்பட்டேன். நாங்கள் சேகரித்து வரும் எமிஸ் டேட்டாக்கள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி, சுமார் பத்து துறைகளின் செயல்பாடுகளுக்கு பயனளிக்கும். எமிஸ் பணிகளால் ஆசிரியர்கள் கஷ்டப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து நான்கு நாள்களுக்கு முன்பு கூட ஒரு டெமோ கூட்டம் நடத்தினோம். ஒரு மாணவர் வகுப்புக்கு வந்திருக்கிறாரா இல்லையா? என்பதைப் பார்த்து எமிஸ் பக்கத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வளவுதான். இதில் எந்த கடினமும் கிடையாது. சர்வர் பிரச்னையால் காலை 11.30 மணி வரை இதே வேலையாக இருக்க வேண்டியுள்ளதாகச் சொல்கின்றனர். ஒருமுறை ஆப்சென்ட் அல்லது பிரசன்ட் என்று உள்ளீடு செய்துவிட்டால் சர்வர் இணைப்பு கிடைக்கும்போது அப்டேட் ஆகிவிடும்.
ஆனாலும், ஆசிரியர்களின் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எமிஸ் பணிகளால் வேலைப்பளு இருப்பதாக கருதினால் அதுபற்றி எங்களுக்கு லெட்டர் மூலமாக தெரியப்படுத்தலாம். ஆனால் இதுவரை எமிஸ் பற்றி ஒரு அமைச்சர் என்ற முறையில் என்னிடம் வந்து ஒரு ஆசிரியர் கூட புகார் சொன்னதில்லை. இப்போது சேகரிக்கப்படும் எமிஸ் விவரங்கள் 100 சதவீதம் துல்லியத்தன்மை வாய்ந்தவை. இதன் பலன்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் தெரியும். அப்போது பாருங்கள்.
கேள்வி: எமிஸ் பணிகள் நல்லதுதான். ஆனால் நான் சொல்வது அதைப்பற்றி அல்ல. எமிஸ் பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி...?
அமைச்சர்: ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100 பதிவேடுகளைக் கையால் எழுதிக்கொண்டு இருந்தனர். இப்போது அந்த நிலை இல்லை. எமிஸ் திட்டம் என்பது ஏற்கனவே இருந்ததுதான். முன்பு இருந்த பணிப்பளுவோடு ஒப்பிடுகையில் இப்போது வேலைகளை எளிமையாக்கி இருக்கிறோம். உங்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது இதன் பயன்கள் தெரியவரும்.
கேள்வி: பொருளீட்டும் தாய் அல்லது தந்தையரில் ஒருவர் அல்லது இருவரும் விபத்தில் இறந்தால் அவர்களின் குழந்தைக்கு 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை, விபத்தில் இறந்தால் மட்டும் என்றில்லாமல் தற்கொலை, இயற்கை மரணம், குடும்பப் பிரச்னைகளால் ஒற்றை பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்...
அமைச்சர்: உங்கள் யோசனையை பரிசீலிக்கிறோம்.
கேள்வி: தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடம் நடத்தாமலேயே நேரடியாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றார்களே?
அமைச்சர்: தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதில்லை என்பதால்தான் அதற்கும் பொதுத்தேர்வு நடைமுறையைக் கொண்டு வந்தோம். மறுபடியும் விதிகளை மீறி செயல்படுவதைத் தனியார் பள்ளிகள் உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பேட்டியின்போது அமைச்சர் மதிவேந்தன், சேலம் எம்.பி. பார்த்திபன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment