குழந்தைகளுக்கு மொபைல்போன் தராதீர்! பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் திட்டவட்டம்


ஆன்லைன்' வகுப்புகளுக்கு வாய்ப்பில்லை என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'மொபைல் போன்' வாங்கி தரவேண்டாம்,' என, பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், மாணவர்கள், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வருவதைக்கண்டறிந்து தடுக்கும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.


வகுப்பு ஆசிரியர்கள், அவ்வப்போது, மாணவ-, மாணவியரின் புத்தகப்பைகளை சோதனை செய்து, மொபைல்போனை கண்டறிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களிடம் இருந்து மொபைல் போனை வாங்கி வைத்துக்கொண்டு, பெற்றோரை வரவைத்து, அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.


மாணவ, மாணவியர் சிலர், ஆசிரியர்களிடம் சிக்காமல் இருக்க, பள்ளி அருகே உள்ள ஏதாவது ஒரு கடையில், தங்கள் மொபைல் போனை கொடுத்து விட்டு, பள்ளி முடிந்தபின் மீண்டும் பெற்றுச் செல்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் நேற்று நடந்த பெற்றோர் ஆலோசனை கூட்டத்தில், இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டது.


பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:மாணவ, மாணவியரின் இத்தகைய நடவடிக்கைக்கு கடிவாளம் போடப்படவுள்ளது. இதற்காக, பள்ளி மேலாண்மைக்குழுவினரால், சம்பந்தப்பட்ட கடைகள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், இனி வரும் நாட்களில், ஆன்லைன் வகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதால், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கித்தர வேண்டாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog