கல்வியில் பின் தங்கியோருக்கு பயிற்சி... ஏற்பாடு; ஏப்ரலில் துவங்க கல்வித் துறை திட்டம்
கடலுார் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வுஎழுத உள்ள மாணவ, மாணவியரில் பின் தங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுஏப்ரல் மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வியில் மிகவும் பின்தங்கிய கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதியும் துவங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, சி.இ.ஓ., அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கல்வியில் பின் தங்கியுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்ற முதற்கட்டமாக அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவோரில் பின் தங்கியவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், எந்த பாடங்களில் பின் தங்கியுள்ளனர், பின் தங்கிய காரணம் குறித்து கண்டறியப்படும். பின், அவர்களுக்கு சிறிய தேர்வு நடத்தி, பல வகைகளில் தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
2ம் திருப்புதல் தேர்வு முடிந்ததும், ஏப்ரல் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு உதவிப் பெறும் மேல் நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் பின் தங்கிய மாணவர்கள் உள்ளனர்.இவர்களையும் கண்காணித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இரண்டாம் கட்டமாக பிளஸ் 1 வகுப்பில் கல்வியில் பின் தங்கிய மாணவ, மாணவியரையும் கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
Comments
Post a Comment