700 மாணவர்களுக்கு பாடம் நடத்தும் 7 ஆசிரியர்கள்: பற்றாக்குறையால் திணறும் சேலம் அரசு பள்ளி
: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், 700 மாணவ, மாணவியர் உள்ள நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையால் பெற்றோர் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.சேலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
தனியார் பங்களிப்போடு, கணினி வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி, புதிய சீருடை, கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால், இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகரித்துள்ளனர். மாநிலத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட துவக்கப்பள்ளிகளில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. பல கிலோ மீட்டர் சுற்றளவிலிருந்து வாகனங்களில் வந்து செல்லும் அளவுக்கு இப்பள்ளி பிரபலமடைந்துள்ளது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காததால், கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பல வகுப்புகளை ஒரே ஆசிரியர் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மக்களின் நம்பிக்கையை அரசு பள்ளி பெற்று வரும் சூழலில், ஆசிரியர் பற்றாக்குறையால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து இப்பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிக்கு இணையாக கற்றல் செயல்பாடுகள் இருப்பதால், மாணவர்களை ஆர்வமாக இதில் சேர்த்தோம். ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதால், கூடுதல் மாணவர்கள் சேர்ந்தால், உடனடியாக ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என நம்பினோம். ஆனால், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இருக்கும் நிலையில், 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
கூடுதல் பணியிடங்களை உருவாக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாற்றுப்பணியாக கூட, ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுகளில் தேக்கம் உருவாகியுள்ளது. ஆசிரியர் கவுன்சலிங், பணிநிரவல் கவுன்சலிங் என அனைத்தும் நிறைவடைந்த பின்பும், இன்னும் ஆசிரியர்கள் வரவில்லை. பெற்றோர் நம்பிக்கை இழக்கும் முன், இப்பள்ளியின் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment