காவலர் எழுத்துத்தேர்வு நுழைவுச்சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் : புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டினை இணையதளத்திலிருந்து நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது
புதுச்சேரி காவல்துறையில் காவலர்கள் 390, ரேடியோ டெக்னீசியன் 12 மற்றும் டெக் ஹேண்ட்லர் 29 என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதில் 7,530 பேர் பங்கேற்றதில், ஆண்கள் 2,207, பெண்கள் 687 என 2,894 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு புதுச்சேரியில் 7 மையங்களில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், காவலர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் நாளை (மார்ச் 11) காலை 9 மணி முதல் தங்களது எழுத்துத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்களை கொடுக்கப்பட்டுள்ள “https/recruitment.py.gov.in/police” இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதே போல் டெக் ஹேண்டலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 20-ம் தேதி நடைபெறாது, அத்தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், பிற விவரங்கள் மற்றும் உதவிக்கு 0413- 2233228 என்ற எண்ணில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment