அதிர்ச்சி எட்டு முதுகலை ஆசிரியர்கள் திடீர் பணியிட மாற்றம் ; பொதுத்தேர்வு மாணவர்கள் கல்வி கேள்விக்குறி முன்மாதிரியாக திகழும் பெருநகர் பள்ளியில் அவலம்
உத்திரமேரூர் : முன்மாதிரியாக திகழும் பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை ஆசிரியர்கள் எட்டு பேர் ஒரே நேரத்தில் பணியிடம் மாறுதலாகி இருப்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 1,820 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.கணிதம், உயிரியல், வரலாறு, உள்ளிட்ட எட்டு பாடப் பிரிவுகளில் 400க்கும் அதிகமான பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பயில்கின்றனர்.கடந்த 2017ல், 926 மாணவர்கள் பயின்ற நிலையில், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாலதி என்பவர் பொறுப்பேற்றதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை இரு மடங்கு உயர்த்தியது.கடந்த 2018ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு முன்மாதிரி பள்ளியாக தேர்வானது.
இதையடுத்து, அரசு நிதி மற்றும் தனியார் நன்கொடை வாயிலாக, பல கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், 'சிசிடிவி' கேமரா வைத்து கண்காணிப்பு, பூங்கா, பள்ளி கட்டட அறையில் கலைநயமிக்க வண்ண ஓவியங்கள், சுதந்திர போராட்ட விடுதலை தலைவர்களின் உருவங்கள் என, மாணவர்கள் நல்ல சிந்தனை செய்யதக்க புதுமைகளும் புகுத்தப்பட்டு உள்ளன.இம்மாதிரியான செயல்பாடுகளால், சுற்றிலும் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ - மாணவியரையும், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.\இதனால் இப்பள்ளியின் வளர்ச்சி, குறுகிய காலத்தில் வேகம் எடுத்திருந்தது.வரும் மே மாதம், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள இந்த சமயத்தில், இப்பள்ளியில் ஒரேயடியாக எட்டு முதுநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றுள்ளனர்.உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், கணிதவியல், பொருளியல் உட்பட எட்டு ஆசிரியர்கள் மாறுதலில் சென்றுள்ளனர்.பொதுத்தேர்வு நெருங்கும்நேரத்தில், ஆசிரியர்கள் மாறுதலாகி இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியின் தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்களிடத்தில் கண்டிப்பு தன்மை அதிகம் காட்டியதாலும், வேலைப்பளு போன்ற காரணங்களாலும், முதுநிலை ஆசிரியர்கள் பலர் ஒரேயடியாக பணி மாறுதல்பெற்றுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.தலைமை ஆசிரியை மாலதி கூறியதாவது:முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலான பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து பணி மாறுதலாகி உள்ளனர்.பொதுத்தேர்வு நெருங்கும் இச்சமயத்தில், ஆசிரியர்களின் இடமாற்றம் வருத்தம் அளிக்கிறது.மாணவர்கள் நலன் கருதி அடுத்த இரண்டு மாதங்கள் வரை இப்பள்ளியில் பணி மேற்கொண்டிருக்கலாம். காலி பணி இடங்களால், மாணவர்களுக்கு தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய சில முதுநிலை ஆசிரியர்கள், பணியிட மாறுதல் விதிகளுக்கு உட்பட்டு, கலந்தாய்வு கூட்டத்தில் முறையாக விண்ணப்பித்து, பணி இடம் மாறியுள்ளனர்.பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும், பொது மாறுதல் கோருவது அவர்களது உரிமை. பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, அப்பள்ளியை சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைய செய்து, மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த முக்கிய பங்காற்றி உள்ளார்.
எனினும், ஆசிரியர்களுடனான அணுகுமுறையில், கண்டிப்பு என்ற பெயரில் அதிகாரம் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதன் தாக்கத்தால், ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து, கல்வித் துறை உயர் அதிகாரி கவனத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம். பணி மாறுதல் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான ஆசிரியர் காலி பணி இடங்கள் நிரப்ப, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்கடந்த 2018ல் 75 சதவீதமும், 2019ல் 92.5 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2020, 2021ல் கொரோனா தொற்று காரணமாக, அனைத்த மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.
Comments
Post a Comment