வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க கல்வித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 28ம் தேதி இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு துவங்க உள்ளது. இதில், வினாத்தாள் வெளியாவதை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கால் வீட்டில் இருந்த மாணவர்களை பொது தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், திருப்புதல் தேர்வுகளை நடத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 1ல் முதற்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள், முன் கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள், போலீசில் புகார் அளித்தனர். தி.மலை மாவட்டத்தில் வினாத்தாள் லீக் ஆனது தெரியவந்தது. இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.இந்நிலையில், முதற்கட்ட தேர்வை போல, இரண்டாம் கட்ட தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தேர்வை நடத்துவது தொடர்பாக, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த தேர்வுக்கு முதன்முறையாக, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகை வினாத்தாள் லீக் ஆனதால், தேர்வில் அடுத்த வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.
Comments
Post a Comment