உதவித்தொகைக்கான திறனறி தேர்வு: 1.73 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னை:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த திறனறி தேர்வில், பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றன.
நாடு முழுதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் குடும்ப பொருளாதார அடிப்படையில், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் வகையில், திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசின் சார்பில், மாநில அரசுகளே இந்தத் தேர்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்கின்றன.
இதன்படி, தமிழகத்தில் 6,995 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதல் தேர்வு, 826 மையங்களில் நேற்று நடந்தது; 1.73 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.மனத்திறன் மற்றும் படிப்பறிவு திறன் ஆகிய இரண்டு வினாத்தாள்களில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன. சிறந்த விடைகளை தேர்வு செய்யும் வகையில், கணினி வழி திருத்தம் செய்யும் விடைத்தாளில், இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மொத்தம், 40 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெறுவர்.
நேற்றைய வினாத்தாளில், தமிழக பாட திட்டம் மற்றும் கற்பித்தல் முறைக்கு மாறாக, மத்தியஇடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., கற்பித்தல் வகை கேள்விகளே அதிகமாக இடம் பெற்றன. அதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவது சற்று கடினம்என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment