ஆசிரியர் பணிக்கு மீண்டும் நியமன தேர்வு வேலை இல்லாதோரின் வயிற்றில் அடிப்பு: மாநில பொது செயலாளர் அதிருப்தி
தேனி:'ஆசிரியர் பணிக்கு மீண்டும் நியமன தேர்வு நடத்தி வேலையில்லாத ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மாநில பொது செயலாளர் கூறியதாவது: கடந்த 2013ல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9 ஆண்டுகளாக பணி வழங்க வில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெற முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களை பணியில் நியமிக்க வேண்டும்.வேலை வாய்ப்பு முன்னுரிமை பின்பற்றாமல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றததையும் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர் நியமனத்திற்கென மீண்டும் நியமன தேர்வு எழுத அரசாணை 149 வெளியிடப்பட்டுள்ளது. இது அநீதி. இதை ரத்து செய்ய வேண்டும்.
எந்த ஒரு அரசு பணிக்கும் இதுபோல் பல தேர்வுகள் நடத்தவில்லை. இது வேலையில்லாமல் தவிக்கும் ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் நலன் கருதி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரதம் நடத்தி வருபவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்
Comments
Post a Comment