கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு; மத்திய அரசின் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு





Entry Requirements in National Education Policy: பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய உயர்க்கல்வித் தகுதி கட்டமைப்பின் வரைவில் (Draft National Higher Education Qualification Framework) இடம் பெற்றுள்ள முதல் நிலைத் தகுதிகளுக்கு (Entry Requirements) கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது தமிழக அரசு.


இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே வரைவு செயலாக்கத்திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Entry Requirements in National Education Policy - வரைவின் அம்சங்கள்


22.02.2022 அன்று, தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான the DMK's surprising silence கட்டுரையில், 'தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வரைவு குறித்து தமிழக அரசு வெளிப்படையாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை', 'தற்போது நடைமுறையில் இருக்கும் 10+2+3 என்ற உயர்க்கல்வி முறையில் பாரிய அளவில் மாற்றங்களை இந்த திட்டம் முன்மொழிகிறது' என்றும் குறிப்பிட்டிருந்தது.


மேலும் அதில், 'பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல்நிலை தகுதிகள் (Entry Requirements) தேவை என்று வரைவு முன்மொழிவு செய்துள்ளது. 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பு படிக்க தேவையான அடிப்படைத் தகுதியாக இருக்கின்ற நிலையில், குறிப்பிட்ட அளவிலான சாதனைகள் உட்பட, முதல்நிலைத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின் படி முதலாம் ஆண்டு படிக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்று வரைவு குறிப்பிட்டுள்ளது' என்றும் கூறியுள்ளது.


இந்த சொற்றொடரில் தெளிவாக எதனை தகுதி என்று வரைவு, வரையறுக்காத காரணத்தால், பட்டப்படிப்பு படிக்க செல்லும் மாணவர்களுக்கும் 'கட்டாய தகுதித் தேர்வுவை' மத்திய அரசு கொண்டு வரலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.


Draft National Higher Education Qualification Framework -ல் இடம் பெற்றுள்ள தகவல்கள்

முதலாம் ஆண்டில் ஏதேனும் ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், அடுத்து இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படித்து, 'அரியர்ஸை க்ளியர்' செய்ய வாய்ப்புகள் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், முதல்நிலைத் தகுதி என்று மத்திய அரசு வரையறை செய்திருக்கும் அளவுகளின் அடிப்படையிலும் தான் மாணவர்கள் தங்களின் கல்வியை தொடர முடியும் என்பதையும் முன்மொழிகிறது இந்த வரைவு.


வரைவில் முதலாம் ஆண்டுடன் வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டமும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹானர்ஸ் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் கல்வியை மேற்கொண்டு தொடரலாம். அதற்கு அவர்கள் 7.5% சி.ஜி.பி.ஏ-வைப் (CGPA Cumulative Grade Point Average) பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது வரைவு.


கல்வியாளர்களின் கருத்துகள் என்ன?


பல்கலைக்கழக மானியக் குழுவின், தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவின் மூலம் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தவே மத்திய அரசு முயல்கிறது என்று கூறுகிறார்

பொது கல்விக்கான மாநில மேடையின் (The State Platform for Common School System (Tamil Nadu)) பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.


'இந்திய அரசியல் அமைப்பில் மாநகராட்சி, பல்கலைக்கழங்கங்கள், இலக்கியம், அறிவியல், மதம், சொசைட்டி , சங்கம், கூட்டுறவு சங்கம் போன்றவை மாநிலப் பட்டியலில் 32வது அதிகார வரம்புகளாக பட்டியல் இடப்பட்டுள்ளது. அதே போன்று தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உள்ளிட்ட கல்வி பொதுப்பட்டியலில் 25-வது அதிகாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக மத்திய அரசு இந்த அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவது இந்திய அரசியல் அமைப்பு, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதற்கு சமமானது.


தற்போது மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு பல்கலைக்கழகத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்கிறது. பல்கலைக்கழகம் தொடர்பான எந்த வித சட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாநில அரசே இயற்ற முடியும் என்கிற சூழலில், கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்க இந்த வரைவு பரிந்துரை செய்கிறது. இதனால் பல்கலைக்கழகங்கள், தங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் வரையறை, தேர்வு நடத்துவது உள்ளிட்ட எந்தவிதமான கல்விப் பணிகளிலும் தலையிட முடியாத சூழலை தான் இது உருவாக்கும். இது கல்வி நிலையங்களின் நிர்வாக அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.


சமூக நீதி எங்கே?


அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுவிட்டால் பாடத்திட்டங்கள், மதிப்பெண், மாணவர் சேர்க்கை என்று அனைத்தையும் அந்த கல்லூரி நிர்வாகமே உறுதி செய்யும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க தமிழகம் 69% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. இட ஒதுக்கீடு இந்த கல்லூரிகளில் வருங்காலத்தில் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. மாநில இட ஒதுக்கீடு இல்லை என்றால், தேசிய இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பான விளக்கமும் வரைவில் இடம் பெறவில்லை.


தனியார் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேவையான நிதியை அவை பெற்றிருக்கும். ஆனால் அரசு நிதியில் இயங்கும் கல்லூரிகளின் நிலைமை? இந்த வரைவு அமலுக்கு வரும் பட்சத்தில் 3-ல் ஒரு பங்கு அரசுக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். அரசு கல்லூரிகளையே பெரிதும் நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் மாணவர்களின் கல்வி வெறும் கனவாகவே கலையும். மாணவர்கள் தங்களுக்கான கல்வியை பெற உறுதுணையாக நிற்க வேண்டிய சமூக நீதிக்கு அங்கே வேலை இல்லாமல் போய்விடும் என்றும் கூறுகிறார் அவர்.


இடை நிற்றல் அதிகரிக்கும்


வரைவில், அனைத்து கல்வி ஆண்டுக்கும் நுழைவுத் தேர்வு அல்லது தகுதி அடிப்படையில் தேர்ச்சி என்று அறிவிக்கிறது மத்திய அரசு. 12ம் வகுப்பில் அவர்கள் (மத்திய அரசு) எதிர்பார்க்கும் தகுதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்கள் கல்லூரியில் சேர முடியும். முதலாம் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் வரை, பள்ளிகளில் இருப்பதைப் போன்றே அதே ஆண்டில் மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்ற 'செக் பாய்ண்ட்டை' வைக்கிறது அரசு. ஒரு சில மாணவர்களுக்கு தங்களின் பாடத்திடங்களை புரிந்து கொள்ளவே அதிக காலம் எடுக்கும். சமூகம், பொருளாதாரம், அவர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்டையில் இந்த புரிதலுக்கான காலம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.


சிலர் முதலாம் ஆண்டில் வைத்த 'அரியரை' மூன்றாம் ஆண்டில் 'க்ளியர்' செய்வதும் உண்டு. ஆனால் புதிய வரைவு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கல்வி கற்கும் காலத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதனால் அதிக அளவில் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாகவே இருப்பார்கள்.


3 ஆண்டுகளுக்கு மேல், விருப்பத்தின் அடிப்படையில், நான்காம் ஆண்டு படிக்கவும் மாணவர்கள் செல்லலாம் என்கிறது அரசின் வரைவு. ஆனால் நான்கு ஆண்டுகள் படிக்கும் மாணவருக்கும் அதே 'டிகிரி' வழங்கப்படும் பட்சத்தில், யு.பி.எஸ்.சி. போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும், பணி உயர்வு தருணங்களிலும் எந்த கல்வி அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.


பொருளாதார தேவைக்காக வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற உயர்த்தட்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு படிக்க முடியும். ஆனால் இதர மாணவர்களின் நிலை என்னவாகும்? மீண்டும், வசதி படைத்த, நன்கு கல்வி கற்ற சமூகத்தை சேர்ந்த, சமூக கட்டமைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில பிரிவினரே தொடர்ந்து இத்தகைய திருத்தங்கள் / திட்டங்கள் மூலம் பயன் அடைவார்கள் என்றும் கூறினார் கஜேந்திர பாபு.


நிறைகளும் - குறைகளும் இருக்கிறது


கல்வி அமைப்பில் ஒரு சீர்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றால் அதில் நிறை - குறை இரண்டுமே இருக்கும். கல்லூரியில் முதலாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு சான்றும், இரண்டாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் பட்டமும் வழங்கப்படும் பட்சத்தில் அதனை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்பு கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விடும் மாணவர்களுக்கு எந்த விதமான கல்வி தகுதிச் சான்றும் கிடைக்காது. ஆனால் இதில் அவர்களுக்கு தகுதிச் சான்று கிடைப்பது ஒரு கல்வித் தகுதியாக கருதப்படும் என்று கூறுகிறார் போட்டித் தேர்வு பயிற்சியாளரும் எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.


இது நன்மை என்றால், பட்டயம் கிடைத்தது வரை போதும் என்று வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். இதற்கு முன்பு 'அரியர்ஸ்' இருந்தாலும் மூன்றாம் ஆண்டு முடித்தால் தான் 'டிகிரி' கிடைக்கும் என்ற எண்ணம் மாறும் போது, மாணவர்கள் மேற்கொண்டு படிக்க ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறினார்.


அரசு தன்னுடைய வரைவில் குறிப்பிட்டிருக்கும் முதல்நிலை தகுதிகள் (Entrance Qualification) என்பது எதன் அடிப்படையில் அமைகிறது என்பதையும் நாம் ஆராய வேண்டும். தகுதியை வரையறை செய்கிறதா அல்லது போட்டித் தேர்வுகளை குறிப்பிடுகிறதா என்பது தெரியவில்லை. தகுதியை வரையறை செய்தால் அது ஏற்புடையது தான். ஆனால் போட்டித் தேர்வுகளையும், அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தால் அது மாணவர்களுக்கு மேற்கொண்டு அழுத்தத்தையே தரும். ஏற்கனவே 12ம் வகுப்பில் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு மீண்டும் தகுதி தேர்வு ஏன் தேவை என்ற வாதங்களையும் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். எனவே என்னைப் பொறுத்தவரையில் அத்தகைய தகுதி தேர்வுகள் அல்லது தகுதி நிர்ணயத்தை அரசு நீக்க வேண்டும்' என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.


'இன்றைய சூழலில் கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது இந்த வரைவு. ஆனால் ஒரு குழந்தையின் பெற்றோராக எந்த நிர்வாகத்தின் கீழ் கல்லூரி இயங்குகிறது, யார் பாடத்திட்டங்களை வகிக்கிறார்கள் என்பது எனக்கு தேவையற்றது. நிர்வாக ரீதியாக மாற்றம் வருகின்ற பட்சத்தில், அரசு நிச்சயமாக அதில் திருத்தங்களை கொண்டு வர இயலும். கல்வி கற்றல் முறை, சூழல், கல்வி ஆண்டின் துவக்கம் என்பது தொடர்பாக நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது எனவே அரசு நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு, தகுதி வரையறை என்பது போன்ற விசயங்களை தவிர்த்து, தேவையான பிரிவுகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்' என்றும் அவர் கூறினார்.


உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் அறிக்கை


இந்த சூழலில் வெளியான அமைச்சரின் 3 பக்க அறிக்கையில் மேலும், 'தேசியக் கல்விக் கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயில முதல்நிலைத் தகுதிகளை (Entry requirements) மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.


மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரத்து செய்யப்பட்டது. இலவசக் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலை வாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட்டது.


அதுபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில நுழைவுத்தேர்வு கட்டாயமென்பதை திமுக தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதை தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போது உள்ள 10+2+3 என்ற கல்வி முறையை மாற்றக் கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாகும்.


ஆனால், தற்போதைய தேசியக் கல்விக் கொள்கையின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றாமாண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழக அரசு வன்மையாக எதிர்க்கிறது.


மேலும், மூன்றாண்டு இளநிலைப் பட்டப் படிப்பே தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்துரைக்கிறது. இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மற்றொருபுறம், முதல் மூன்றாண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி (CGPA) 7.5-க்கும் குறைவாக பெற்றிருப்போர் நான்காமாண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். இதுவும் தமிழக அரசின் கல்வி கொள்கைக்கு முரணானதாகும்.


மேற்கண்ட வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப் படாமல் தற்காலிக இடைநிறுத்தம் (Break System) செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் (Duration of Study) நீட்டிக்கப்படுவதுடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு அதனை எதிர்க்கிறது.


மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். ஏழை, எளிய விளிம்புநிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கென குழு ஒன்று அமைக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பிற்கிணங்க அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது' என்றும் குறிப்பிட்டிருந்தார்

Comments

Popular posts from this blog