பள்ளி கல்வித்துறை குளறுபடி; ஆசிரியர்கள் அதிருப்தி
சேலம்: பள்ளி கல்வித்துறையில் தொடரும் குளறுபடியால், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா சூழலுக்கு பின், கடந்த செப்டம்பர் முதல் அரசு பள்ளிகள் செயல்பட தொடங்கின.
பொதுத்தேர்வு எழுத உள்ள, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடத்திட்டம் முடிவு செய்வதில் தொடங்கி, ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் ஏராளமான மாற்றம், திருப்புதல் தேர்வில் குளறுபடி என, பள்ளி கல்வித்துறை செயல்பாடு, அரசு பள்ளி ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கொரோனா சூழலில் கல்வியாண்டுக்கு குறைந்த நாளே உள்ள நிலையில், மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையை திட்டமிட்டதில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டன. பாடத்திட்ட குறைப்பு, பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை, மீண்டும் வகுப்பு, தேர்வுக்கு தயார்படுத்தல் உள்ளிட்ட அனைத்திலும் தினமும் ஒரு மாற்றம். இதனால் கற்பித்தலில் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. பொதுத்தேர்வு போன்று திருப்புதல் தேர்வு நடக்கும் என அறிவித்துவிட்டு, விடைத்தாள் மதிப்பீடு மையம், வேறு ஆசிரியர்கள் மதிப்பீடு என, பல ஏற்பாடுகளை செய்த பின், வினாத்தாள், 'லீக்' ஆக, சாதாரண தேர்வு என்றும், மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் சமாளித்தனர்.
ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, அட்டவணையை மட்டும் நான்கு முறை மாற்றி மாற்றி வெளியிட்டு அவதிக்கு ஆளாக்கியுள்ளனர். எங்களுக்கு தேவையான பயிற்சியை கண்டுணர்ந்து, அவற்றை வழங்குவதற்கு பதில், விடுமுறையிலும் பள்ளிக்கு வர வைக்க, ஏதேதோ பயிற்சியை வழங்குவது, பள்ளி தொடங்கியதும் ரத்து செய்தது போன்றவற்றால் ஒரு பயனுமில்லை. அமைச்சர் ஒரு அறிக்கை விடுவது, பள்ளி கல்வித்துறை கமிஷனர் வேறு வழிமுறைகளை வெளியிடுவது என கல்வித்துறை செயல்பாடுகளால், மாணவர்களை கவனிக்க வழியின்றி தவிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment