முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மைய ஒதுகீட்டில் தொடரும் குழப்பம்
கோவை : முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 12ம் தேதி துவங்கவுள்ளது.
பாடவாரியாக தேர்வுகள், 20ம் தேதி வரை காலை, மதியம் இரண்டு அமர்வுகளில் நடக்கவுள்ளன. இந்நிலையில், தேர்வர்களுக்கு சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் மையங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, பெண் தேர்வர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை, 7:30 மணிக்கே வர அறிவுறுத்தப்பட்டுள்ளதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தேர்வர் லதா கூறுகையில், ''கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த எனக்கு சேலத்தில் மையம் ஒதுக்கியுள்ளனர். சக தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார்.
அவருக்கு, நாமக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சம்மந்தம் இல்லாமல், தேர்வு மையங்கள் அனைவருக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் தேர்வு மையத்திற்கும் வரவேண்டிய நேரம், 7:30 என்றும், 8:15 மணிக்கு மேல் ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.அதுவும், 12ம் தேதி தேர்வுக்கு, மாவட்டம் மட்டும் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மையத்தின் பெயர் ஒதுக்கி, நுழைவுச்சீட்டு இனிமேல் தான் ஒதுக்கப்படும். புதிய இடத்தில் பெண்கள் தனியாக, முந்தைய நாள் சென்று தங்கி தேர்வு எழுதவேண்டும்; இதில் பாதுகாப்பு எங்கு உள்ளது.சொந்த ஊரில் மையங்கள் ஒதுக்க இடம் இருக்கையில், தேர்வர்களை அலைக்கழிப்பது சரியல்ல. அதிகாரிகள் உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குள் மையங்களை ஒதுக்கி நுழைவுச்சீட்டு வெளியிடவேண்டும்,'' என்றார்
Comments
Post a Comment