டிபிஐ வளாகத்தில் 3,000 சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்: தேர்தல் வாக்குறுதிப்படி முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் என மாதம் 12 நாட்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தொகுப்பூதியமாக முதலில் ரூ.5 ஆயிரம், பிறகு ரூ.7,700 என்றும், தற்போது ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
வேறு பணி கிடைத்தது போன்ற காரணங்களால் சிலர் விலகிய நிலையில், தற்போது சிறப்பு ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குமாறு அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது மாவட்ட அளவிலும், சென்னை டிபிஐ அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கு.சேசுராஜா, மாநில செயலாளர் கு.நவீன், மாநில பொருளாளர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள். பலர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா கூறியதாவது:
எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தை கொண்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும். பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று 2016 மற்றும் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 12,500 பேரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, டிபிஐ வளாகத்திலும், அதன் 3 நுழைவுவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments
Post a Comment