குரூப் 2 தேர்வு மையம்: தேர்வர்கள் அதிருப்தி


உடுமலை:தமிழக அரசு துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில், 116 நேர்முக தேர்வு பணியிடங்கள் மற்றும் 5,413 நேர்முக தேர்வு அல்லாத பணி இடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு, மே 21ல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதற்கான 'ஆன்லைன்' பதிவு துவங்கிய நிலையில், மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


முதல் நிலை எழுத்து தேர்வு, மாவட்ட தலைநகர் மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடத்தப்படுகிறது. பின், முதன்மை தேர்வு, 20 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், முதல்நிலை எழுத்து தேர்வுக்கான மையங்கள், திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, தாராபுரம் தாலுகா பகுதிகளில் அமைக்கப்படுகிறது. தேர்வு ஆணையத்தின் இந்த முடிவு உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தேர்வர்கள், குரூப் 2ல் பங்கேற்க உள்ள நிலையில், உடுமலையில் மையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தேர்வர்கள் கூறியதாவது: உடுமலையில் கடந்த, 2018ல், குரூப் தேர்வு நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாத நிலையில், தற்போது, அறிவிப்பு வெளியாகி உள்ளதால், பலரும் தேர்வு எழுத ஆயத்தமாகி உள்ளனர். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் இத்தேர்வில் பங்கேற்பர். தொலைதுாரம் பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் சரிவர தேர்வை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.தவிர, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, குறித்த நேரத்தில் செல்ல முறையான போக்குவரத்து வசதியும் கிடையாது. இச்சூழலில், உடுமலையில் மையம் அமைக்க திட்டமிடாதது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.இவ்வாறு, கூறினர்

Comments

Popular posts from this blog