புதுச்சேரியில் மார்ச் 19-ல் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு
காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 19-ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 29 டெக் ஹாண்டலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டது. காவலர் பணிக்கு 13 ஆயிரத்து 971 பேர், டெக் ஹாண்டலர் பணிக்கு 588 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 559 விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டன.
இந்த பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை உடற்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் நடத்தப்பட்டது. தேர்வின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 21, 22-ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
டெக் ஹாண்டலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வு முருங்கம்பாக்கம் நீச்சல் மையத்தில் நடத்தப்பட்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14 ஆயிரத்து 559 பேரில் உடற்தகுதி தேர்வில் 7 ஆயிரத்து 530 பேர் மட்டுமே பங்கேற்றனர். இவர்களில் 2 ஆயிரத்து 207 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 894 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நிர்வாக சீர்திருத்தத் துறை வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு, மார்ச் 19-ம் தேதி காலை 10 முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.
டெக் ஹாண்டலர் பணிக்கு மார்ச் 20-ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை எழுத்துத் தேர்வு நடக்கிறது. எழுத்துத் தேர்வு நடக்கும் மையங்கள், ஹால் டிக்கெட் டவுண்லோடு குறித்து விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment