10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..?தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு..? பள்ளி கல்வித்துறை தகவல்
தமிழகத்தில், கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு உள்ளதால், முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இந்த தேர்வுகள், முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 17 ஆம் தேதில் முடிகின்றன. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவும் பொதுத் தேர்வு போல ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே பொதுத் தேர்வு போல இரண்டு திருப்புதல் தேர்வுகளை நடத்துவதால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக வாய்ப்பு உள்ளது. எனவே, ஏப்ரல் மாத இறுதி வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
பொதுத் தேர்வை ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி துவங்கினால், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக தேர்வை முடிக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நடத்துவதால், பொதுத் தேர்வு குறித்த அழுத்தம், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் குறைக்க முடியும் என உளவியலாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
மேலும், மே 1ல் மே தினம், மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் என்பதால், அதற்கு முன் தேர்வை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட்டால், ஏப்ரலில் தேர்வை துவங்கி, ரம்ஜான் விடுமுறைக்கு பின், மே முதல் வாரத்தில் தேர்வை முடிக்கும் வகையிலும், மற்றொரு அட்டவணையையும் அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், பள்ளிக் கல்வித் துறை, தேர்வு துறை அதிகாரிகள் ஆலோசித்து, தேர்வு அட்டவணையை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment