கல்லூரிகள் திறந்தாலும் 'ஆன்-லைனில்' தேர்வு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
விழுப்புரம்:''தமிழகத்தில் கல்லுாரிகள் திறக்கப்பட்டாலும், தேர்வுகள் 'ஆன்லைன்' மூலமாகவே நடைபெறும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பிப்., 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். டிசம்பரில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், பிப்., 1ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என, அறிவித்து இருந்தோம்.
கல்லுாரிகள் திறக்கப்படுவதால் இதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற எண்ணம் சிலருக்கு உதித்துள்ளது. செமஸ்டர் தேர்வு ஏற்கனவே அறிவித்தது போல், ஆன்லைனில் நடைபெறும். செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. இதில், மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்.தேர்வுகள் இல்லாத நாளில் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும்.
குறிப்பாக, பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு துவங்கப்பட்டு நடைபெறும்.தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கையை பின்பற்றுவதில்,தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம்.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும். தேர்வுகள் முறையாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment