புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: சிவா
ஆசிரியர் படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி அரசில் ஆசிரியர் பணிக்கு, மத்திய அரசு நடத்தும் 'சி -டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.தற்போது தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.இருப்பினும், அதில் எடுக்கும் மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் தரப்படாது, தகுதியாக மட்டுமே கருதப்படும் எனவும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் பணிக்கு என படித்துவிட்டு, பின்னர் அதற்கான தகுதித் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றாலும் பணி வழங்கப்படாது என்றால் எதற்கு அந்தத் தேர்வு?தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது, ஊழலுக்கு வழி வகுக்கும்.எனவே ஆசிரியர் படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும்.அல்லது புதுச்சேரி அரசே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி சீனியாரிட்டி அடிப்படையில் பணியை வழங்க வேண்டும்.ஏதேனும் ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்றும், தமிழகத்தை போல் வயது தளர்வு வழங்கியும், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.அரசுப் ஆசிரியர் பணிக்கு வர விரும்புவோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment