வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
கும்பகோணத்தில் உள்ள ஏஐடியூசி கூட்ட அரங்கில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இளங்கேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் சேலம் பாரதி துவக்க உரையாற்றினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில துணைச் செயலாளர் துரை.அருள்ராஜன் பேசினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இளங்கேஸ்வரன், துணைத்தலைவர் குருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் திவான், துணைச் செயலாளர் சதீஸ், பொருளாளர் தழிழரசன் உள்ளிட்ட 19 இளைஞர்களை கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
பேரவை கூட்டத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை பரிசீலனை என்ற பெயரில் நீண்ட காலமாக கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுனர், சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளித்தும், தமிழக மாணவர்கள் நலன் கருதியும் மேலும் காலதாமதம் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு உடனே அனுப்பவேண்டும். கடந்த 31.10.2021 கணக்கின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்து, அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள், இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தகுதிக்கேற்ப வேலை வழங்கிட வேண்டும், மாவீரன் பகத்சிங் பெயரில் தேசிய இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்றி அனைவருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண உதவித் தொகையை ரூ.5,000 என உயர்த்தி, அரசு வேலை கிடைக்கும் வரை தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விகடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்து இளைஞர்களின் வேலை உரிமை மீட்பு மாநாடு ஹைதராபாத்தில் வருகிற 7,8,9,10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்ட செயலாளர் திவான் நன்றி கூறினார்.
Comments
Post a Comment