அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை.
வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும்.
இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment