மின் வாரிய தேர்வு நடக்குமா? 2 ஆண்டாக 2 லட்சம் பேர் காத்திருப்பு!


சென்னை:உதவி பொறியாளர் உட்பட மூன்று பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பம் பெற்று, இரு ஆண்டுகளாகியும் தேர்வு நடத்தாத நிலையில், அரசின் புதிய அறிவிப்பால், மின் வாரிய தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


வேலைக்காக 2 லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.தமிழக மின் வாரியத்தில், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் - கணக்கு; 1,300 கணக்கீட்டாளர் என 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


குழப்பங்கள்


அந்த ஆண்டின் பிப்ரவரி, மார்ச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உதவியாளர் கணக்கு பதவிக்கு 32 ஆயிரம் பேர்; கணக்கீட்டாளர் பதவிக்கு 79 ஆயிரம் பேர்; உதவி பொறியாளர் பதவிக்கு 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பொது பிரிவினரிடம் 1,000 ரூபாயும்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினிரிடம் 500 ரூபாயும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா முதல் அலையை தடுக்க, அந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு நடத்தப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், 2021 மே மாதம் தேர்வு நடத்த முடிவானது. சட்டசபை தேர்தலால் நடத்தவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் மின் வாரிய தேர்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே விண்ணப்பம் பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தி, வேலை வழங்கப்படுமா அல்லது புதிய அறிவிப்பு வெளியிட்டு, அவர்களுடன் சேர்த்து தங்களுக்கும் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பங்கள் இருந்தன.

விரைவில் அறிவிப்பு


இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, 'புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்' என்று கூறினர். விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவித்தனர். மின் வாரிய வேலைக்கு படித்து தயாராவதற்காக, தனியார் துறையில் கிடைத்த வேலையிலும் பலர் சேரவில்லை.

இந்தச் சூழலில், 'இனி அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு பணியிடங்களுக்கான தேர்வை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தான் நடத்தும்' என்று, அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.இதனால், மின் வாரிய பணிகளுக்கான தேர்வையும் தேர்வாணையம் நடத்த வாய்ப்புள்ளது.

எனவே, மின் வாரியம் வேலைக்காக அறிவிப்பு வெளியிட்டு, இரு ஆண்டுகளாக நடத்தப் படாமல் உள்ள தேர்வை, இனியும் நடத்துமா அல்லது அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுமா என்பதை, இனியும் தாமதிக்காமல்விரைந்து அறிவிக்க வேண்டும்.ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரர்களிடம் பெற்ற தேர்வு கட்டணத்தை, வட்டியுடன் சேர்த்து திரும்ப வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog